பாரதி – காலத்தை வென்றவன்

(காலத்தை வென்றவன் என்ற தலைப்பில் பாரதியின் 99-ஆவது வருட நினைவு தினத்தன்று (11.09.2020)  கொல்கத்தா பாரதி தமிழ் சங்கத்திற்காக இணைய வழியில் நான் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். உரையின் பொழுது பாடல்கள் சிலவற்றைப் பாடினேன், அது இங்கில்லை. தொழில்நுட்பக் கோளாறினால் உரையில் பாதி பதிவாகவில்லை, ஆகவே இங்கு முழுமையாக அளித்துள்ளேன்.)

அனைவருக்கும் வணக்கம். காலத்தை வென்றவன் என்ற தலைப்பில் உள்ள முரண் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.”நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு”  என்னும் குறள் உலகின் நிலையாமையை, மனிதனின் அநித்தியத்தைச் சொல்லிச் செல்கிறது. கொள்ளை நோயின் தாக்கத்தில் நாடே முடங்கித்  தவிக்கும் நேரத்தில் அதை தனியாக விளக்கத் தேவையில்லை. மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்ற பொருளில் கொண்டால் மகாகவி, தேசிய கவி என்று அழைக்கப்படுகிற பாரதியை, அவர் பாடல்களை நாம் அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம். அவரது நாட்டுப்பற்றுப் பாடல்களும்  பக்திப் பாடல்களும் தமிழ் மக்கள் வாழும் இடத்தில் ஒலித்துக் கொண்டே இருப்பதனால் அவர் காலத்தை வென்றவர் ஆகின்றாரா என்றால் அதுவும் தான், அனால் அதையும் தாண்டி அவரை உயர்த்தும் கூறுகள் பல உள்ளன என்று சொல்ல முடியும்.

பாரதியின் தேசபக்திப் பாடல்கள், காதல், பக்தி, வேதாந்தப் பாடல்கள் இன்றுவரை ஒலிப்பது உண்மை. என்றாலும், ‘பள்ளத்திலே நெடுநாள் அழுகும் கேட்ட பாசியை ஏற்றி வரும் வெள்ளத்தைப் போல் அருள் வார்த்தைகள்’ மட்டும் அவர் அடையாளம் அல்ல. அந்த எழுத்திற்கு பின்னாலிருக்கும் ஆளுமையும், வாழ்க்கைப்பின்புலமும் கவனிக்கத்தக்கது. அது முற்றிலுமாக பிரிக்கக் கூடுவதுமல்ல, அதே நேரம், முழுமையாக பொருந்திப் போவதுமல்ல. அது அவன் எழுத்தை தருணப்படுத்திக்கொள்ள உதவும் முக்கியமான கருவி.

படைப்பாளன் காலகட்டத்தின் தட்பவெப்பமானி. அவன் வாழ்க்கை அவன் வாழ்ந்த காலத்தின் ஒட்டுமொத்த பண்பாட்டு சித்திரத்தை அளிக்கிறது. தமிழின் நீண்ட எழுத்து மரபில் கபிலன், கம்பனின் வழித்தோன்றல் பாரதி என்றாலும், தமிழின் முதல் நவீன கவிஞன் என்ற பெருமை அவனுக்கு உண்டு .நவீனம் என்பது மரபு வெறுப்பல்ல. ‘யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவன்போல், இளங்கோவைப்போல் பூமிதனில்’ வேறொருவரில்லை என்று மரபு சார்ந்த பெருங்கவிஞர்களின் மீது பாரதிக்கு பற்று இருந்தது.  நவீனம் என்பது பிறந்த தேதியை வைத்து சொல்லப்படும் அளவுகோல் அல்ல. தான் வாழும் சமூகத்தின் பண்பாடு, அதன் அழகியல், அரசியல் நுட்பங்களை மட்டும் பேசும் இலக்கியப்பார்வையை மீறி, பிறவற்றைப் நோக்கியும், உலக இலக்கியங்களின் பார்வைகளை எழுத்தில் தேக்கியும் அமைவது நவீனம் எனலாம். பாரதி வால்ட் விட்மனையும், ஷெல்லியையும் வாசிப்பவன். தன்னை ஷெல்லிதாசன் என்று அழைத்துக்கொள்கிறான். ஷெல்லி பிரெஞ்சு புரட்சியின் குழந்தை. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதே பிரெஞ்சு புரட்சியின் தாரக மந்திரங்கள். அதை பாரதியின் எழுத்தில் பார்க்கலாம்.

மன்னவனை பாராட்டி பரிசில் பெறுவது போல, அரசை இடித்துரைக்கும், தூற்றும் பாடல்களை மரபிலக்கியத்திலும் காணலாம். கம்பனின் தனிப்பாடல் திரட்டில் அமைந்த இப்பாடல் சான்றதற்கு.

"மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ 
உன்னை அறிந்தோ தமிழை ஒதினேன்-என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?"

பாரதியின் குரலில், “எல்லோரும் இந்நாட்டு மன்னர்” என்று மும்முறை உரத்துக் கூறி பொதுவுடைமைப்பாடலாக இது மாறுகிறது. மரபின் திரட்சியை புதுக்குரலில், தனி மொழியில் சொல்லி அமைவதால் இது நவீனமாகிறது.

பாரதியின் சமூக -அரசியல்-வரலாற்று வண்ணம் ஏற்ற தேர்ந்த நவீன மனம் அவர் கவிதைகளில் மட்டுமல்லாது அவர் கட்டுரையிலும் காண இயல்வது. அதை மூன்றாக பிரித்துக்கொள்ளலாம்.

1. சாதி அரசியல் நிலைப்பாடு:

பாரதி தன் பூணூலை களைந்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பூணுல் அணிவித்தது வரலாறு. அது முரணாகப் பார்க்கப்பட்டது. பதினாயிரம் மனைவிகள் கொண்ட கண்ணன் தன்னை நித்திய பிரம்மச்சாரி என்று சொல்வது போல் இருக்கிறது என்று நண்பர்களே கிண்டல் செய்தனர். விடுதலைக்கு பின்பு “ஆரிய பூமியில்” போன்ற பாடல்கள் சர்ச்சைக்குள்ளாக்கியது. இன்று இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்து எழுபது ஆண்டுகள் கடந்த பிறகும் சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு தர வேண்டுமா என்ற விவாதம் எழுந்து கொண்டே இருக்கிறது. ஒடுக்கப்படட மக்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டு செல்ல இரண்டு வழிகள் – ஒன்று அதிகார வர்க்கத்தால் மட்டுமே செய்யக்கூடிய உரிமை உரித்துப்படுத்தல் (positive affirmation), அதாவது கல்வியில், வேலை வைப்பில் அளிக்கும் முன்னுரிமை, இட ஒதுக்கீடு. இரண்டு – தனி நபர்கள், ஆதிக்க வகுப்பை சேர்ந்தவர் என்ற அடிப்படையில்  தனக்களிக்கப்படட, அல்லது தான் பறித்துக்கொண்ட சலுகைகளை (privileges) தாமாகவே முன்வந்து மறுதலிப்பது. முன்னது, பாரதி பூணுல் அணிவிப்பது, இரண்டாவது தான் அணிந்திருந்த பூணுலை கழற்றி எறிவது. அவரால் பூணுல் அணிவிக்கப்பட்டரா.கனகலிங்கம் ஒடுக்கபட்டோர் மேம்பாட்டுக்கு களத்தில் பாரதியின் பணியை மேற்கோள் காட்டுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதென்னவோ பாரதி அன்பர்களின் போற்றிமொழி என்று புறந்தள்ள வேண்டாம். பாரதியின் காலக்கட்டிடத்தில் இன்று நாம் பிரித்தறியும் பொருளில் “ஆரியம்” “திராவிடம்” என்ற சொற்கள் அமையவில்லை என்று அறிஞர் அண்ணா கூறுகிறார். அண்ணாவே, பாரதியின் முன்னேற்றக கருத்துக்களை சுட்டி, பாரதியின் தேசிய பாடல்களை மட்டும் பெரிதாக்கி அவரின்  சமூகப் பார்வைகளை உள்ளடக்கிய முழு உருவத்தை மறைக்கிறோம் என்று புகழ்மாலை சூட்டுகிறார். ஆரிய பூமியை பாடும் பாரதி தான் “சூத்திரனக்கொரு நீதி தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி எனச் சாத்திரம் கொல்லிடுமாயின் – சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்” என்றும் கூறுகிறார். “சாமி நீ சாமி நீ கடவுள் நீயே” என்று வேதாந்தம் பேசி தொல்மரபை போற்றியபடியே  “ஞால முழுமைக்கும் ஒன்றாய் எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை” என்று காலத்திற்கு ஒவ்வாத பழமைவாதத்தை சாடுகிறார். ஒருவேளை இன்றைய சிக்கல்களுக்கு பாரதியின் வரிகளில் தீர்வு காணுவதைக்கூட ‘பண்டை பெருமை, பழம்பெருமை இது, உங்கள் தீர்வென்ன?’ என்று பாரதி கேட்பான் என்பது என் துணிபு.

இன்று எதை எடுத்தாலும் ‘நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’ என்று கூறி தொன்மையானது என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, மனிதத்திற்கு எதிரான, களைய வேண்டிய பல கசடுகளை போற்றும் பலரைக் காண முடிகிறது. சமீபத்தில், கொரோனா தொற்றை தடுப்பதற்கு சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், சுத்தம், சுகாதாரத்தைப் பேண வேண்டும் போன்ற செய்திகளை விஷமிகள் சிலர் சாதியின் பெயரால் மக்கள் ஒருவரை ஒருவர் தொடக்கூடாது, இவர் தொட்டதை மற்றொருவர் தொடமாட்டார் என்றும் கூறும் கீழ்மையான தீண்டாமையோடு ஒப்பிட்டு, “நம் முன்னோர் வழி அமைவோம்” என்று சிலர் குறுஞ்செய்தி அனுப்பி மகிழ்ந்தனர். அவர்களுக்கு மறுமொழி பாரதியின் மொழியில்:

"முன்பி ருந்ததொர் காரணத் தாலே
மூட ரேபொய்யை மெய்யென லாமோ?
முன்பெனச் சொல்லுங் காலம தற்கு
மூட ரேயொர் வரையறை உண்டோ?
முன்பெனச் சொலி னேற்றுமுன் பேயாம்
மூன்று கோடி வருடமு முன்பே.
முன்பி ருந்தெண்ணி லாது புவிமேல்
மொய்த்த மக்களெல்லா முனி வோரோ?
நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்த தில்லை எனநினைத் தீரோ
மக்கள் அனைவருள் ளேயும்
நீர்பி றப்பதன் முன்பு மடமை
நீசத் தன்மை இருந்தன அன்றோ?

“ஒன்றுண்டு மானிட சாதி” என்று கூறியவர் இன்றைய சமூக அவலங்களை எண்ணி வருந்துவார் என்பதில் ஐயமில்லை.  இவ்வெண்ணம் அவருள் வேர்கொண்டு இருந்ததனால் தான் அவரால் தன் துயரை மீறி நாட்டின் பெருந்துயரை, மானுடத்தின் பெரும்துன்பத்தைத் தூக்கி சுமக்க முடிந்தது. வெறும் காழ்ப்பையும் வெறுப்பையும் உமிழாமல், “காக்கைக்கு குருவி எங்கள் சாதி” என்று இயற்கையோடு ஒன்றி வாழ முடிந்தது.

சார் மன்னன் வீழ ருசிய புரட்சியின் வெற்றியை பாடும்போது, “மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற் கடைக்கண் வைத்தால் அங்கே ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்” என்கிறார். அந்த மாகாளி இங்கு திருவல்லிகேணியில் வறுமையின்  தவிக்கும் பாரதியின் மீது கடைக்கண் வைக்கவில்லை, அனால் அவர் ஆகா காரம் போட்டு பாடுவதை நிறுத்தவில்லை என்பதுஅழகிய நகைமுரண். அந்நிய ஆட்சியில் பாரதி சந்தித்த இன்னல்கள் கொஞ்சம் அல்ல, தேசத்துரோக குற்றத்திற்காக அவரை எந்நேரமும் துரத்தும் காவல், அதற்கு மறைந்து வாழ்வது, அதனால் ஏற்பட்ட தீராத வறுமை, கொள்கைப் பற்றுதலால் இழந்த வாய்ப்புகள், சமூக நீதியை பேசி சுய சாதியினரின் வெறுப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகி இழந்த நட்புகள் என சொல்லிக் கொண்டே போகலாம். நேர்மறை சிந்தனைகளின் அவசியத்தை பல விதங்களில் மக்கள் வலியுறுத்தும் இந்நாட்களில், கொடுந்துயரிடையே பாரதி “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா”, “இன்பமே வேண்டி நிற்போம் யாவும் அவள் தருவாள்” என்று நம்பிக்கையுடன் இருந்து “வானகம் இன்று தென்பட வேண்டும்” என்று வேண்டி நின்றது, “கனவு மெய்ப்பட வேண்டும்” என்று சொல்லி அயராதுழைத்தது புத்துணர்வு தருகிறது.

இத்தனை இன்னல்களை, பழிகளை வேறொருவர் தாங்காமல் மனம் பிறழ்ந்து விடுவார், சமரசங்கள் செய்யத் துணிவார், ஆனால் பாரதி கொள்கை உறுதியுடன், அரைக்க அரைக்க மணக்கும் சந்தனம் போல்  துலங்கினார் என்று அண்ணா பாராட்டுகிறார். அதனால் தான் இன்றுவரை அவர்  நிற்கிறார்.

2. கொள்கைத் தெளிவு:

ஒத்துழையாமை இயக்கத்தின் (1920) பொழுது பாரதி சுதேச மித்திரன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். அவ்வியக்கத்தை பாரதி முழு மனதுடன் ஆதரிக்கவில்லை, அதனால் அவர் தேசியவாதி அல்ல, ஆகவே பத்திரிக்கை ஆசிரியர் பதிவியிலிருந்து விலக வேண்டும் என்ற தொனியில் புகார் எழுந்து வந்தது. 1919 ஆம் ஆண்டு வந்த ரௌலட் சட்டம் மற்றும் ஜாலியன்வாலா பாக்-இல் நடந்த படுகொலைக்கு பிறகு, அந்நிய அரசுக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் முன்னெடுத்த அஹிம்சை வழி இயக்கம் இது. இதன் மையக்கூறுகள் – ஆங்கில அரசாட்சியில் இருக்கும் இந்தியர்கள் வேலை துறத்தல், நீதிமன்ற புறக்கணிப்பு, அந்நிய பொருட்களை துறத்தல், அரசு கல்வி இயக்கங்களைத் துறத்தல் ஆகியவை. பாரதிக்கு இந்த இயக்கத்தின் நோக்கத்தின் மீது சந்தேகம் அல்ல. ஆனால், ஏற்கனவே தொழில்கள் நலிவுற்று, செல்வங்களை இழந்து தவிக்கும் நாட்களில் பிள்ளைகள் படிப்பை விடுவதும், வக்கீல்கள் வேலை இழந்து சிறைவாழ் இந்தியர் அல்லல் படுவதும் நல்லதல்ல என்கிறார். ஆட்சியை தக்க வைக்க வன்முறையை, அடக்குமுறையை கையாண்ட ஆங்கிலேயர் மீண்டும் நம் மக்களை துன்புறுத்துவரே என்று அஞ்சுகிறார், அதை சுதேசமித்திரனில் ஒரு கட்டுரையாக வெளிக்கொணர்கிறார்.. கடைசியில் நிகழ்ந்தென்னவோ பாரதி அஞ்சியது தான். சௌரி சௌரா நிகழ்விற்கு பதிலடியாக பல இந்தியர்கள் அந்நியர் பிடியில் சிக்கினர், சிறை சென்றனர், காயமுற்றனர், அரசின் சட்டதிட்டங்களில் கெடுபிடி அதிகமாயிற்று. அதைவிட முக்கியமானது, காந்தியை அந்த இயக்கத்தை திரும்பப் பெற்றுக்கொண்டார். படைப்பூக்கம் கொண்ட ஒரு எழுத்தாளன் சிந்தனையாளன், தீர்க்க தரிசனத்தோடு இதை முன்னமே சொல்லி அவதூறுகளை பெற்றுக்கொண்டான்.

இன்றும் இந்நிலை தொடர்வதைப் பார்க்கிறோம். ஸ்காட் பேக்கர் என்ற கனடிய எழுத்தாளரின் ‘த ஜட்ஜிங் ஐ’ என்ற புனைவில் இருந்து ஒரு வரி, “ஒரு பிச்சைக்காரரின் தவறு அவரைத்தவிர வேறொருவரையும் பாதிப்பதில்லை. ஆனால் ஒரு அரசனின் தவறு அனைவரையும் பாதிக்கிறது. பெரும்பாலும் ஆற்றலின் அளவீடு உன் சொல்லை ஏற்று கீழ்ப்படிந்து நடப்பவர்களின் எண்ணிக்கையில் இல்லை, மாறாக  உன் முட்டாள்தனத்தால் அவதியுறும் நபர்களின் எண்ணிக்கையில் உள்ளது.” உங்களுக்கு பணமதிப்பிழப்பு, குடிமக்கள் சட்டத் திருத்த எதிர்ப்புகள் நினைவுக்கு வரலாம்.

அரசுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுப்பது நாட்டுக்கெதிரானது என்று திருப்பப்படுகிறது. ஒரு கொள்கையை, திட்டத்தை விமர்சனம் செய்தால் இந்திய-எதிரி, தேசத்துரோகி எனப் பட்டம் கட்டி பாகிஸ்தானுக்கும் இத்தாலிக்கு செல்ல மிரட்டல் வருகிறது. நான் இந்தியன் தான் என்று சிறுபான்மைச் சமூகத்தினரும், ஒடுக்கப்பட்டவரும் நொடிக்கொருமுறை உரக்கக் கூவி நிரூபிக்க வேண்டியிருக்கிறது. ஒத்துழையாமை இயக்கத்தைத் தன்னால் ஏன் மனம் ஒப்பி ஆதரிக்க முடியவில்லை என்ற கட்டுரையிலேயே பாரதி மக்களிடையே புழங்கும் இந்த மனநோய்க்கு மருந்து தருகிறார்.

அபிப்ராய பேதமுடையவர்களும் தேசாபிமானிகளாக இருப்பாராயின், அவர்களை நாம் மிக மதிப்புடன் நடத்த வேண்டுமென்ற நியாயத்துக்கு இத்தருணத்தில், சுதேசமித்திரன் பத்திரிகை ஓரிலக்கியமாகத் திகழ்ந்து வருகிறது. இங்கனம் பெருந்தன்மை பாராட்டும் பத்திரிகையைக் கூட மஹாத்மா காந்தியின் புது முறையை முற்றிலும் அனுஷ்டித்துத் தீர வேண்டுமென்ற கருத்துடைய என் நண்பர் சிலர் பொதுமையும், தீர்க்காலோசனையுமின்றிப் பல வழிகளிலே பழி கூறி வருவதைக் காணுமிடத்து எனக்கு மிகுந்த மன வருத்த முண்டாகிறது. தேச பக்தர்களுக்குள்ளே முடிவான கொள்கைகளைப் பற்றியன்று; வெறுமே தற்கால அனுஷ்டானங்களைப் பற்றி அபிப்பிராய பேதமுண்டாகும் போது உடனே பரஸ்பரம் ஸம்சயப்படுதலும் பழி தூற்றுதலும் மிகக் கொடிய வழக்கங்களென்று நான் நிச்சயமாகவே கூறவல்லேன். இந்த நிலைமை என் மனதில், சில வைஷ்ணவர்களுக்குள்ளே வடகலை, தென்கலைச் சண்டைகள் நடப்பதையும், வீடு வெள்ளை பூசுதல் விஷயமான ஓரபிப்பிராய பேதத்தைக் கொண்டு தமக்குள்ளே சண்டை செய்து பிரியும் மதி கெட்ட ஸ்திரீ புருஷரின் நடையையும் நினைப்புறுத்துகிறது.

இந்தக் குணத்தை நம்மவர் அறவே விட்டொழி தாலன்றித் தற்காலம் இந்தியா இருக்கும் நிலையில், நாம் விடுதலைக்காகப் பொது முயற்சி செய்வதில் பல இடுக்கண்கள் விளையக் கூடும். எடுத்ததற் கெல்லாம் ஜாதிப்ரஷ்டம் செய்யத் தீர்மானிக்கும் குணத்தை நாம் ராஜாங்க விஷயங்களில் செலுத்தினால், பெருங்கேடுகள் வந்து குறுக்கிடும், “உன்வழி உனக்கு; என்வழி எனக்கு; இந்தியாவுக்கு உடனே ஸ்வராஜ்யம் வேண்டுமென்ற லக்ஷ்யத்தில் நீயும் நானும் ஒன்று பட்டிருக்கிறோம், எனவே நாம் பரஸ்பரம் இயன்ற வரையிலெல்லாம் உதவி செய்து கொள்ளக் கடவோம். உதவி புரிதல் இயலாத இடத்தேவெறுமே இருப்போம், ஆனால் எக்காரணம் பற்றியும், நம்முள் பகைக்க வேனும், பழி கூற வேனும், ஸம்சயப்பட வேனும், வேறெவ்வகையிலும் இடுக்கண் புரியவேனும் ஒரு போதும் மாட்டோம்” என்ற பரஸ்பர உணர்ச்சி தேசபக்தர்களுக்குள் எப்போதும் குன்றாதிருக்க வேண்டும்.”

அந்நியரை எதிர்ப்பவதை விட தம் மக்கள் பிழையை சுட்டுவது கடினம். அதை கட்டுரையாக வடிப்பது எளிது, ஆனால் பின்பற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் வரலாம், குறுக்கு கேள்விகள் எழலாம். ராஜாராம் மோகன் ராயின் மகளிர் கல்வி, விதவை மறுமணம் போன்ற கொள்கைகளை பாரதி ஆதரித்ததோடு நில்லாமல், அவருடைய சரித்திரம் இந்தியர் ஒவ்வொருவரின் வீட்டில் இருக்க வேண்டிய பொக்கிஷம் என்றும் கூறுகிறார். ராய் முன்னெடுத்த மத சமூக இயக்கமான பிரம்ம சமாஜம் உருவ வழிபாட்டுக்கு எதிரானது, அதைச் சுட்டி உருவ வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த பாரதியிடம் கேட்ட போது, சமாஜத்தின் இந்த கொள்கை எவ்விதத்திலும் ராயின் பெருமையை குறைக்காது, மாறாக உயர்த்தவே செய்யும் என்று நயத்துடன் மறுமொழி கூறுகிறார்.

இது ராய் போன்ற பெரிய மனிதருக்கு மட்டும் பாரதி காட்டும் மரியாதை என்று சொல்லிவிட முடியாது. அரவிந்தர் ஆசிரமத்தில் வங்காளி ஒருவர் வங்காளிகளை விட தமிழர்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்று சொல்ல, இன்றைய அரசியல் விவாத்தைப்போல “நீயென்ன ரொம்ப ஒழுங்கா”? என்று பாரதி கேட்கவில்லை, வங்காளிகள் பெயரில் குற்றப்பட்டியலை வாசிக்கவில்லை, வசை மொழி கூறவில்லை.

கல்வியிலும், அறிவியலிலும், கலையிலும், தேசப்பற்றிலும், எவ்விதத்திலும் தமிழர் வங்காளிகளுக்கு ஒப்புமை வைக்கத் தக்கவர்களே அன்றி குறைந்தவர்கள் அல்ல என்று எடுத்துரைக்கிறார். தமிழரிடம் பேசுங்கள், பழகுங்கள், அவரைப் பற்றி படித்து தெரிந்துகொள்ளுங்கள் என்று உணர்ச்சி பொங்க கூறுகிறார். நல்லவர்கள் பலர் இங்கு இருப்பதனால் தான் அரவிந்தர் இங்கு வந்திருக்கிறார் என்று அரவிந்தர் முன்னாலேயே போட்டு உடைக்கிறார், அரவிந்தரும் அதை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறார். அந்த வங்காளி பாரதியிடம் மன்னிப்புக் கோருகிறார்.

3. மானுடப் பார்வை:

இவை எல்லாவற்றையும் மீறி பாரதி நிலைத்திருப்பது அவன் முன்னெடுத்த மானுட மதிப்பீடுகள்,  அதை அவன் சொல்லிய பாங்கு. மரபிற்கும் நவீனத்திற்குமான வேறுபாட்டை முன்னால் பார்த்தோம், அதில் பெயரளவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்றும் மாறாதது ஆணாதிக்கச் சமூகம் பெண்களை நடத்தும் முறை. இல்லை, இப்போதெல்லாம்  நாங்கள் மகளிர் தினத்திற்கு வாழ்த்துகிறோமே என்று சிலர் சொல்லலாம். வாழ்த்து எப்படி வருகிறது? எனக்குத் தாயாக, தாரமாக, மகளாக, சகோதரியாக, தோழியாக அமைந்தவளே என்று. தாயே, அம்மா! என்று பூஜை அறையில் பூட்டிப் பாதுகாக்கிறோம் என்று. துப்பட்டா போடுங்கள் தோழி!// முகத்தை மறைக்கலேன்னா அது நம்ம மனதுக்கு எதிரானது//வேற சாதி/மதத்துல பையன புடிச்சி பெத்தவங்கள சாகடிக்காத//உனக்கெதுக்கு வேலை? ஏன் இவ்ளோ சம்பளம்? என்று. பெண்களுக்கு குடும்ப அமைப்பை மீறிய இடம் ஓரிடம் உள்ளது என்ற புரிதல் இல்லை. அவள் நம்மைப்போல் ஓருயிர் என்ற சிந்தனை வரவில்லை. ஆனால் பாரதி, “பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்று தனக்கான பாதையை தான் ஏற்று நடக்கும் புதுமைப் பெண்ணைப் பற்றி பேசுகிறான். கலாச்சார காவலர்கள் பெண்ணை இரட்சித்த, பூஜித்த லட்சணம் போதும் பெண்களை பாதுகாக்க வேண்டிய தேவை அற்றுப் போகும் பரிணாம வளர்ச்சி அடைந்த சமத்துவ சமூகமாக மாற வேண்டும் என்ற இன்றைய பெண்ணியவாதிகளின் கனவை பாரதி தான் முதலில் காண்கிறான். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை காண் என்னும் வாக்கு பெண்ணாய் பிறப்பதற்கே மாதவம் செய்ய வேண்டும் போன்ற புகழ்மொழிகளை வெல்வது அக்கணத்தில்.

சாகாவரம் பெற்று காலனை காலால் உதைக்கும் கனவை மனதில் விதைக்கிறான். பகைவனுக்கு அருள் வேண்டுகிறான், உலகத்தோரை காதல் செய்ய அறிவுறுத்துகிறான். நூலைப் பகுத்துணர் என்கிறான், ரௌத்திரம் பழகச் சொல்கிறான். எண்ணியது வேண்டும் கணத்தில், நல்லவே எண்ணல் வேண்டும் என்று முந்திச் சொல்கிறான். தாங்கவொண்ணாத் துயரின் இடையே, ஒரு தோல்வியிலிருந்து மற்றொன்றுக்கு உற்சாகம் குறையாமல், புன்னகையுடன் பெருங்கனவுகளைச் சுமந்தலைகிறான். இப்படி எக்காலத்தும் பொருந்தும் சொற்களைப் பாடி, என்றும் நிலைத்து நிற்கும் மானுட அறத்திற்கு துணை நிற்கும் பெருவாழ்வை வாழ்ந்து காட்டியதால் தான் இன்றைய இளம் வாசகரும் பாரதியை அணுக்கனாக எண்ணுகிறான், மூதாதை இடத்திலிருக்கும் ஒருவரை அவன்-இவனென்று ஒருமையில் அழைக்கும் உரிமையை கைக்கொள்கிறாள். மக்கள் மனதை வென்று கொண்டே நின்றவன் தானே, காலத்தை வென்றவன்?

குறிப்புகள்
பாரதியார் கவிதைகள், கட்டுரைகள், கதைகள்
நண்பர்கள் நினைவில் பாரதி, இளசை மணி
பாரதி ஆய்வுக் கட்டுரைகள், பெ.சு.மணி
பாரதியும் ஷெல்லியும் – தொ.மு.சி. ரகுநாதன்
பாரதியார் கடிதங்கள் – ரா. அ. பத்மநாபன்
மகாகவி பாரதியார் வரலாறு வ ராமசாமி
முனைவர் இளங்கோ அவர்களின் “கண்ணன் பாட்டு” உரைகள்
இராட்டை
எழுத்தாளர் ஜெயமோகன் வலைத்தளம்
கனகலிங்கம் கண்ட பாரதி: சில புதிய செய்திகள்

One thought on “பாரதி – காலத்தை வென்றவன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s