அடைக்கும் தாழ்

ஆறாவது முறை அழைப்பு வரும் பொழுது எடுத்துத் தான் ஆக வேண்டும் போல் ஆகிவிட்டது. வாசு அக்கா தான், ஏதோ வேலையாம், ஒரு எட்டு கிராமத்திற்கு வர முடியுமா என்று கேட்கிறாள். கிராமம் என்றால் சாலிக்ராமம். நடேசன் நகரிலிருந்து என்னவாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே  அந்த உடைந்த சுண்ணாம்புச் சிலை மனிதனின் வீடு வழியாக ஜூபிட்டரை மிதித்தால் வாசு அக்காவின் வீடு வந்துவிட்டிருந்தது. ஓர் இரு சக்கர வாகனமும் ஆட்டோவும் எதிரெதிர் வந்தால் டிராபிக் ஜாம் ஆகும் வீதியில் அவள் வீட்டில் மட்டும் மாருதி ரிட்ஸ் ஒன்று பாதி வீட்டின் விளிம்பிலும் தெருவிலுமாக சாய்த்து வைத்தப் படகு போல் நின்றிருந்தது.

வாசு அக்கா வாசலிலேயே காத்திருந்தாள். ஒரு நாளைக்கு எவ்வளவு முறை ஒருவரை குசலம் விசாரிக்கலாம், அவர்களுடைய உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கையின் பொது ஓட்டங்களை பற்றிக் கேட்கலாம் என்பதற்கு சட்டம் இருக்க வேண்டும். இல்லை, விஷயத்தை சுருக்கமாக சொல் என்பதை பதவிசாக சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். “எல்லாம் ஓகே தானே?” என்றேன். வினோதமான மணத்தை நுகர்ந்த நாய் போல அவள் முகம் மாறியது. “நீ அம்மா கிட்ட பேசணுமே, கவி” “அம்மானா மாமியாரா?” “அம்மா. எங்க அம்மா. சமைக்காதேனு சொல்ல சொல்ல சமைக்கறாங்க. மிரட்டி பாத்தாச்சு. நீ அவங்க கிட்ட லாயரா பேசணும்.” “வயசு என்ன ஆவுது?” “எழுவத்து ஆறு. அவசரம் இல்லை. பொறுமையா தயார் பண்ணிட்டு நாளைக்குக் கூட வரலாம்.” உடம்பின் அத்தனை சக்தியையும் திரட்டி சிரிப்பை அடக்கிக்கொள்ளும் வேடிக்கையான தருணம் என்றால் கூட சமாளித்து விடலாம். தன்னையும் மீறி வரும் விரக்தியின் கோணல் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாசுவின் உள்ளங்கை அவளின் வலது நெத்தியிலிருந்து கண்ணத்தில் இறங்கி, நெற்றி பொட்டை மேலும் கீழும் நீவி கழுத்தின் பின் பக்கத்தை அசௌகரியமாக வருடியது. “இப்போவே கூப்பிடு. அத்தைக்கு என் நெனைப்பு இருக்கா?” பற்களைக் காட்டி சிரித்து, “ரொம்ப தேங்க்ஸ். நீ பேசு” என்றபடி பக்கத்து அறையிலிருந்து அன்பு அத்தையை வாசு அக்கா அழைத்து வந்தாள்.

அன்பழகி அத்தை, பெயரும் ஆளும் பொருந்திப் போன பாக்கியவதி. வரும்பொழுதே “அம்மா, பாரு கவிதா வந்திருக்கா. நம்ம வீட்டுல குடியிருந்தாளே? அவ தான். ஹை கோர்ட் லாயர் இப்போ. உன்கிட்ட ஏதோ சொல்லணும்னு சொன்னா” என்றாள் வாசு. நல்ல உத்தி என்று நினைத்துக் கொண்டேன்.

“கவிதானா? கவிதா-புனிதா வா?” அத்தை கேட்டாள்.

“அம்மா. கவிதா. பெரியவ. வக்கீல்.  நீ சமைக்கறல? அதுக்குத் தான் ஏதோ சொல்ல வந்துருக்கா” அத்தையின் இடைமறிப்பிற்கு நடுவில் வாசு அக்கா சொன்னாள்.

“அத்தை, 70 வயசுக்கு மேல இருக்கறவங்க சமைக்க கூடாது. உங்களுக்கு தெரியும்ல? பெற்றோர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலம்புரி சட்டம்னு ஒண்ணு ரெண்டாயிரத்து ஏழுல கொண்டாந்தாச்சு. எழுவது வயசுக்கு மேற்பட்டவங்க  வீட்டு வேலை, சமையல் செய்தா வீடு மனுஷார கொடுமை பண்றங்கனு தூக்கி ஜெயில்ல போட்ருவாங்க. வாசு அக்கா உங்கள சமைக்க சொல்லி கொடுமை செய்யுதா? சொல்லுங்க” என்று குரலை கடுமையாக வைத்துக் கொண்டு கேட்டேன்.

“நீ சட்டம் படிச்சல்லே?” அத்தை நிதானமாக கேட்டாள்.

“ஆமாம் அஞ்சு வருஷமா ப்ராசிட்டிஸ் பண்றேன். அம்மா அப்பாவை கொடுமை செய்யற எத்தனையோ பசங்கள ஜெயில்ல போட சொல்லி நானே போலீஸ் கிட்ட புகார் குடுத்திருக்கேன்.”

“எங்க ப்ராசிடிஸ் பண்றே?”

 “ஹை கோர்ட். பாரிஸ். சமைக்கறப்போ டக்குனு தீ புடிச்சுகிச்சுனா? அது வாசு அக்கா தப்பு தானே. உங்களுக்கு எதுக்கு இந்த வயசுல இவ்ளோ வேலை? நான் விடுவதாக இல்லை.

“வேற என்ன செய்யட்டும்? உடம்பு நல்லா வெச்சிருக்கான் கடவுள். ஏதோ என்னால முடியறத செய்றேன். உமா வேலைக்கு போகும் போது சமைக்க முடியுமா?” வாசு அக்காவை நோக்கி புருவம் உயரத்தினேன். “மறந்துட்டியா, பெரியண்ணன் பொண்டாட்டி” என்றாள்.

“அப்போ வேற ஆள் போட்டுக்க சொல்லுங்க. இல்ல வெள்ளெருந்து வாங்கிக்க சொல்லுங்க”

“அது முடியாது” என்றால் சிறு புன்னகையுடன் “நான் காலை, மதியத்துக்கு மட்டும் சமைக்கறேன். அவ்ளோ தான்.”

“அப்போ உமா அண்ணி, அண்ணன் எல்லாருக்கும் ஜெயில் தான். சட்டத்துல இருக்கு.”

“நானா தானே சமைக்கறேன்” என்று நிறுத்தினாள். “பாதிக்கப்பட்டவங்களுக்கு தான் லோகஸ், இல்லை?” என்றாள்.

“நீங்களே ஒரு லாயர் தான் போல?” சமாளித்தேன், “எல்லா சட்டமும் அப்படி இல்லே. வீட்டில மனைவியை கொடுமை பண்றது, மூத்தவங்கள கொடுமை பண்றதுக்குல்லாம் தனி சட்டம் வந்தாச்சு. யாரு வேணா புகார் செய்யலாம்.

“உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?” அத்தை கேட்டாள்.

“பாத்துக்கிட்டிருக்காங்க” வாசு அக்கா உதவினாள். “நீ சமைச்சா நாங்க போலீஸ் கிட்ட அடி வாங்குவோம். பரவாயில்லையா?”

“சரி. நான் கொஞ்சமா சமைக்கறேன். எனக்கும் அப்பாவுக்கும் மட்டும், வெளி சாப்பாடு அவருக்கு ஒத்ததுக்காது.”கொஞ்சம் விழித்த படி சொன்னாள். உங்க அப்பா எப்படி இருக்கார்?”

“ம்ம். அவர் நல்ல இருக்கார். இப்போ கூட-” வாசு அக்கா கையை காட்டி, “அப்பா தவறி மூணு வருஷம் ஆச்சு மா” மெதுவாக சொன்னாள்.

“ஆமாம்” என்றாள் தட்டையாக. மூன்று பேருடைய மூச்சுச் சத்தமும், மின்விசிறியின் ஒலியும் துல்லியமாக கேட்டது. அத்தை தான் மௌனத்தை கலைத்தாள், “எனக்கு அசதியா இருக்கு. என்னனு தெரியல”

“நீங்க தூங்குங்க. நாளைக்கு வரேன்” என்றேன். வாசு அக்கா அத்தையை பக்கத்து அறைக்குள் கூட்டிச் சென்றாள்.

“திரும்பவும் தேங்க்ஸ்” உதட்டை உள்பக்கமாக மடித்துக் கொண்டு வாசு அக்கா சிரித்தாள்.

“இதுல என்ன இருக்கு? நாளைக்கு சண்டே தானே? நம்ம நாளைக்கு திரும்பவும் முயற்சி பண்ணுவோம். இப்போ கெளம்பணும். வேலை இருக்கு” என்றேன்

“ஒரு நாள்ல முடியாது. அவங்க ரொம்ப ஷார்ப்” என்றாள் பெருமையுடன்.

“கவனிச்சேன். அனு எங்-?”

“அவங்களுக்குஅனு இன்னும் கைக்கொழந்தை. படுக்கையை சுத்தி தலைகாணியை அரணா வெச்சியா? கொழந்த கீழ விழுந்துடும்ங்கறாங்க”

“அனு ஸ்கூல் முடிச்சது, காலேஜ் சேர்ந்தது?

“அப்போப்போ அதுவும் சொல்லுவாங்க. ஆனா இந்த வீட்டுக்கு நாங்க வந்தப்போ அனு கொழந்தை தானே? அதுனால இருக்கலாம்.”

“ஆனா நாங்க அவ கே.ஜி.ல இருக்கிறப்போ தானே வந்தோம்?”

“உன்னை எப்படி ஞாபகம் இருக்குனு கேக்கறியா? தெரியல. கவிதா-புனிதான்னா தெரியும். “

அன்று இரவு யானையின் காதுகளைப் போல காலத்தின் கால்கள் முன்னும் பின்னும் சந்தேகமாக ஆடிக்கொண்டிருந்தன. அத்தையை உண்மையில் எனக்குத் தெரியும் என்று சொல்ல முடியாது. பாசாங்கில்லாதவர், வெளிப்படையானவர்.விடுமுறை நாட்களில் கை கொள்ளாத பண்டங்களை அள்ளி வருவாள்.எனக்கும் அதில் பங்கு உண்டு. தாம்பரத்திலிருந்து சாலிக்ராமத்திற்கு வருவதற்கு இவ்வளவு ஆர்பாட்டமா என்று சில நேரம் யோசித்திருக்கிறேன், அதாவது நூறடிச் சாலையின் அரவுப்பிடியில் மாட்டிக் கொள்வதற்கு முன்னால். தினமும் ஆங்கில நாளிதழை மாமாவுக்கு வாசித்துக்காட்டுவாள். கிளம்பும் நாளன்று வீட்டிற்கு வந்து அத்தையும் மாமாவும் அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பார்கள்.அம்மா என்னை அழைத்து காலில் விழுந்து கும்பிடச் சொல்வாள். மாமா இறந்த பின் அத்தையின் வாழ்க்கை நீதி தேவதையின் கண்கள் போல மாறி விட்டது. திலீப் பிரிந்த பின் என் வாழ்க்கை ஆனது போல.

சட்டக் கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது ஒரு மாணவன் இன்னொரு மாணவனை இரும்புத் தடியால் தாக்கி விட்டான். அந்தத் தாக்குதல் எங்களுக்குப் பெரிய சலனத்தை உண்டு பண்ணவில்லை. சட்டக் கல்லூரி விடுதிகளில் இன்னும் மோசமான சம்பவங்கள் நடக்கக் கேட்டிருக்கிறோம். கல்லூரி வளாகத்துக்குள் பெண்களை தரம் தாழ்த்தி நடத்தும் சீனியர்கள் இருக்கிறார்கள். பொழுது போகவில்லை என்றால் வெள்ளையாக இருக்கும் பெண்ணைப் பிடித்து சுயம்வரம் நடத்திக் கொள்வார்கள். இல்லை, ஈழத் தமிழர், உதவித் தொகை உயர்வு, இலஞ்ச ஒழிப்பு என்று கோஷமிட்டு வகுப்புப் புறக்கணிப்பு நடக்கும். சில நேரம் நடத்துனர் சட்ட மாணவனை மரியாதையை இல்லாமல் சீட்டு எடுக்க சொல்லி விட்டார் என்று பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்தே அன்றைய போராட்ட வேலைகளை ஆரம்பித்தது விடுவார்கள். இதை எல்லாம் வீட்டில் சொல்லிக் கொண்டால் ஐந்து வருடம் படிக்க முடியுமா? அனால் அந்த இரும்புத் தடியன் பட்டப்பகலில், காவலாளி கதவின் மறுபுறம் நிற்க, காமெராக்கள் படம் பிடிக்கும் நேரத்தில் அல்லவா அடித்துத் தொலைத்தான். ஒரு நூறு வருடமாக இயங்கி கொண்டிருக்கும் கல்லூரியை செயதித் தொலைக்காட்சிகள் கண்டு பிடிக்க ஒரு மாணவன் மரண அடி வாங்க வேண்டியிருந்தது. அது நல்லது தான். அனால் இப்படிப் பட்ட கல்லூரியின் மரபில் வந்த பெண்ணிற்கு சீக்கிரம் திருமணம் செய்தால் தான் பாதுகாப்பு என்று அப்பா நினைத்து விட்டார். விட்டாரா? திருமணமும் நடந்து விட்டது.

அன்பு அத்தையும், வாசவி அக்காவும் கூட வந்திருந்தார்கள். “இவ்ளோ சீக்கிரம் ஆகும்னு நினைக்கல” என்றாள். “அமைந்து விட்டது” என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது? உண்மையில், வாழ்க்கையில், இயற்கையில் எல்லாம் அமைந்து விடுகிறது. நான் பெண்ணாக இருப்பது போல. திலீப் ஆணாக இருப்பது போல. திலீப் ஆணாக இருந்து ஆணைக் காதலிப்பது போல. அவன் சொன்னதும் நான் புரிந்து கொண்டேன். நகையை விற்று தனி வீடு எடுத்தேன். வக்கீலாக பதிவு செய்வதற்கு முன்பே என்னுடைய மணமுறிவு மனுவை நானே தயார் செய்தேன். பதிவு செய்தாலும் என்னுடைய வழக்கிற்கு நான் கருப்பு கோட்டு அணியக் கூடாது என்கிற விதி வழக்கு நீதி மன்றத்திற்கு வந்து நீதிபதி கேள்வி கேட்கும் பொழுது நல்லதாகப் பட்டது. இரண்டாம் தாரச் சந்தையில் எனக்கான ஆணை வலை வீசித் தேடும் படலம் ஓடும் தண்ணி லாரியின் மூடிய குழாயிலிருந்து கசியும் போலித் தூறல் போல சொட்டிக் கொண்டிருக்கிறது. வார இறுதி ஆனால் காபிக் கடையில் யாரையாவது சந்திக்க ஏற்பாடாகி இருக்கும்.

வளை குலுக்கும் சத்தம் கேட்டு எழுந்து விட்டேன். மழையா? தலையணையை வைத்து காதை மூடியதால் ஏற்பட்ட வெற்றிடத்தின் ஒலிமயக்கு. மணி நாலரை தான் ஆகியிருந்தது. கனத்த சிறகுடைய பறவை ஒன்று துயிலெழுவதைப்போல நகரம் உயிர் கொள்ளத் தொடங்கி விட்டது. ஏழு மணிக்கு ஒவ்வொரு இறகிலிருந்தும் ஒரு பட்டாம்பூச்சி எழுந்து வந்தது. ஒன்பது மணிக்குள் டைனோசர்கள் விழித்துக் கொண்டன. பத்து மணிக்கு நான் சாலிக்ராமத்திற்குள் நுழைந்து விட்டேன். வாசு அக்காவின் பல்லவிகளுக்கு நான் அனுசரணையாக பின் பாட்டுப் பாடினேன். அன்பு அத்தை என் திருமணத்தைப் பற்றிக் கேட்டாள். நான் அவர் சமைத்தால் வாசு அக்காவை தூக்கில் இடுவார்கள் என்று சொன்னேன்.

“அவர் பிலாய் ஸ்டீல் பிளான்ட்ல வேல செய்யறப்போ, அங்க ஒருத்தன் தூக்குல நெய் கொண்டு வருவான். நாங்க அவனை கிருஷ்ணானு தான் கூப்டுவோம் ” என்றார்.

“எப்போ?”

“எனக்கு கல்யாணம் ஆனா புதுசுல. ஐ வாஸ் நைன்டீன்.  உனக்கு வரன் பாக்கறாங்களா?”

“ம்ம். உங்களுக்கு ஹிந்தி தெரியுமா?”

“ஹிந்தி, மராட்டி, மலையாளம், கொஞ்சம் கன்னடம் கூட தெரியும்!” என்றார் அகலமாக சிரித்துக் கொண்டு.

“ஸச் முச்? (உண்மையாகவா?)

“ஜூட் தோடி ந போல்தி மே” (நான் பொய் சொல்வதில்லை) என்றார் மேலும் சிரிப்புடன். வாசு அக்கா எங்களை வேற்று கிரக வாசிகளைப் பார்ப்பது போல் முறைத்தாள். ஒவ்வொரு முறை நான் சந்திக்கும் பொழுதும் அத்தை தன் நினைவு பெட்டகத்தை திறப்பாள். அது இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

“வெள்ளம் வீட்டுக்குள்ள வரப்போகுது. நம்ம மேல போலாம்” என்று ஒரு நாள் மல்லுக்கட்டினார். மொட்டை மாடிக்கு அழைத்துக் கொண்டு கொளுத்தும் வெயிலில் நின்ற பின்னும் மழை பெய்யவில்லை என்று அவள் நம்பவில்லை. “பாலத்த ஒடச்சிகிட்டு மழை வருது. நான் பாத்தேன்” என்றார் குரலை உயர்த்தி. “அது பேர் என்ன?  துவாரகை மாதிரி. சுனாமி மாதிரி. வெள்ளம்!” என்று எங்களை வலியுடன் பார்த்தார். “கிண்டி, கிண்டி மேம்பாலத்து மேல தண்ணி, வாசவி. நீ பார்க்கல?” என்றார் பரிதாபமாக. அது நடந்து ஒன்றரை வருடங்கள் ஓடி விட்டன என்பதை எங்களால் நம்ப வைக்க முடியவில்லை. அதனால் எந்த நட்டமும் இல்லை. மகரந்த் தூள் போல எங்கெங்கோ ஒட்டி இருக்கும் நினைவுகள், ஒலிகள், காட்சிகளால் ஆன வெளியில் அவளோடு சேர்ந்து நாங்கள் மிதந்து கொண்டிருந்தோம். அங்கு எல்லாமே சுழற்கதவுகள். “உன் பேர் என்ன? இப்போ நாம என்ன சொல்லிக்கிட்டிருந்தோம்? நீ என்ன பன்றேன்னு சொன்ன? “ என்பாள். பூமி மறுபடியும் தன் சுழற்சிப் பாதையில் வந்து விடும்.  நான் கிளம்பும் பொழுது “ஆளுக்கு ரெண்டு கொடத்தை எடுத்துட்டு போய் நில்லுங்க” என்றாள். வருடம்: 1998, மணி: காலை ஐந்து முப்பது, இடம்: கீதா அத்தை ஒண்டுக்குடித்தன வீடு, கொரட்டூர், வேலை: லாரியிருந்து தண்ணீர் பிடிப்பது.” என்றாள் வாசு அக்கா இயந்திரக் குரலில். யாரும் சிரிக்கவில்லை.

நினைவுப் பிசகு இருப்பவருடன் நேரம் செலவிடுவதற்கும், அவருடனே வாழ்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு வார இறுதியில் அதை உணர்ந்து பார்க்க எத்தனித்தேன், பிடித்திருந்தது. காப்பிக்கடை கனவான்களின் உலகங்களை விட அன்பு அத்தையின் உலகம் விசாலமாக இருந்தது. பொய்யாக இருக்கும் உண்மையை விட உண்மையாக இருக்கும் பொய் சுவாரஸ்யமானது. நானும் என் நினைவுப் பெட்டகத்தைத் திறந்து காட்டினேன், அவள் மனம் ரகசியம் காக்கும் என்ற நம்பிக்கையுடன்.

வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு அத்தையை அழைக்கச் சென்றேன். “ஆகாரத்துக்கு அப்பறம் சாப்பட்ற மருந்து சாப்பிடணும்” என்று வாசு அக்கா பையைச் சுட்டினாள். வண்டியில் ஏறிய மறு நொடி, “இது என்ன ஊர்” அத்தை தொடங்கி விட்டாள். “சென்னை தான்” என்றேன். “அப்போ பீச் எங்க?” “இருக்கே” “மஹாபலிபுரம்?” “இருக்கே” வீட்டிற்கு வந்து, “அதான் எங்க?” என்றாள். நான் பதில் சொல்லவில்லை. “அங்க ஒரு மகிஷாசுரமர்தினி இருக்கா”

 “ரொம்ப அழகான சிலை”

“அது சிலை இல்லை, வாசவி, சிற்பம். புடைப்புச் சிற்பம். ஒரு குகைக்குள்ளே. மகிஷனை அழிக்கற தருணம். சிங்கத்து மேல தேவி சர்வாயுதபாணியா வரா. மகிஷனோட படை கிட்டத்தட்ட அழிஞ்சு போச்சு. சர்வநாசம். தேவியோட படைத் தலைவிகள் அரக்கர்களை அழிச்சுகிட்டிருக்காங்க. முன் கையில வில்லை வளைச்சு உடம்பை தந்தி முறுக்கின வீணை மாதிரி தேவி மிதக்கிறது தான் தெரியுது. ஆனா அம்பு இல்லை அங்க! அந்த வில்லில் இருந்து அம்பு புற்பட்டுருச்சு. மகிஷன் கதையை தன் வலுவான கையிலிருந்து மாத்திட்டான். உடம்பு பக்க வாட்டுல திரும்பி காலை மடக்கிட்டான். தோல்வி பயம் அவன் முகத்தில ஏறிடுச்சு! அவனே தோல்வியின் சின்னமா மாறிட்டான். அம்பு வில்லுலேருந்து புறப்பட்டு அதை பார்த்து பயந்து ஓட எத்தனிக்கிற மகிஷனோட அந்த ஒத்தை நொடிய, அந்த வெற்றித் தருணத்தை, சிற்பி பார்த்திருக்கான் பாரு! அசைவுகள் உறைந்து ஒரு தருணம்!”

நான் கண்கள் இமைக்கவில்லை. “உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?”

“தாம்பரத்திலிருந்து போவோமே நம்மல்லாம்? மறந்துட்டியா, வாசவி?”

“நான் வாசவி இல்லை அத்தை” என்றேன் எரிச்சலுடன்.

“வாழ்க்கைக்கு துணை  இருக்கணும்-”

“தேவிக்கு வில்லு மாதிரி?” என்றேன் அடுத்து அவள் பேசுவதற்குள்.

“கல்யாணம் அவசியம் இல்லை”

“என்னது?” என்றேன் ஆச்சர்யத்துடன்.

“நான் காலைலேருந்து சாப்பிடவே இல்லை. ஏன்?” அத்தை என்னை குழப்பமாக பார்த்தாள்.

“நான் பொய் சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்க” என்றேன்.

“எனக்குத் தெரியும்” அத்தை கருணையோடு சிரித்தாள்.

Leave a comment