தென்தமிழக பயணம்

பொதுவாகவே தமிழகத்தின் வடக்குமுகத்தில் வசிப்பவர்களுக்கு தென்தமிழகத்தின் அடியாழத்தில் நீந்த வேண்டும் என்ற ஆவல் இருக்கும். என்னுடைய நெடுநாள் ஆசையும் அது தான். காரணம், சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன், வைக்கம் முஹம்மது  பஷீர் போன்றோர்களினால்  எனக்கு அறிமுகமான சேர நாட்டின் எழில். கலைப் படைப்பு என்றாலே அதில் ஒரு துளியேனும்  மிகை பொதிந்திருக்கும். மிகையும் யதார்த்த உலகும் ஒன்றும் புள்ளி ஒரு கனவு நிலை. நானும், நண்பர் எஸ்ஸும் அப்படி ஒரு கனவுலகை எதிர்நோக்கியே  மூன்று நாள் பயணத்தை மதுரையிலிருந்து துவக்கினோம்.

புறப்பட்டது திருச்செந்தூருக்குத் தான், அனால் வார்த்தைகளால் சென்ற இடம் ஏழாம் உலகம். ஜெயமோகன் என்ற எழுத்தாளனை நான் முற்றும் வெறுத்து ஒதுக்கக் காரணமாக இருந்த நாவல் அது. மானுட  குரூரத்தின் உச்சத்தை ஜெமோ  இதில் தொட்டிருப்பார். ஜெமோவின் கட்டுரைகளில் பொதுமைபடுத்தல் சற்று  மிகுந்திருககும். உலகத்தின் அத்தனை நிகழ்வுகளையும் தன்னுடைய கோட்பாடுகளுக்குள் சுருக்கித் தொங்கவிடுவார். அனால் புனைவுகளில் அவர் வேறு மாதிரியானவர், சுதந்திரமானவர். கட்டுடைப்பவர். முத்திரையாக, மீண்டும் மீண்டும் தோன்றக்கூடிய சிற்சில படிமங்களும், தொன்மங்களும் உண்டு தான். அனால் அதையும் மீறிய ஓர் அசாதாரணமான படைப்பாளிஅவர். காவிரிக்கரை எழுத்தாளர்களைப் போல் இவருடைய புனைவுகளில், (ஜெமோ என்று இல்லை, பொதுவாக நாஞ்சில் நாட்டு புனைவெழுத்தளார்களைச்  சேர்த்துச் சொல்லலாம்) மனிதர்கள் மனிதர்களாக வலம் வருவர். கருப்பு, வெள்ளை, சாம்பல் என்றெல்லாம் தொகுக்க மாட்டார். அழகியவைகளை சொல்வதில் எவ்வளவு தீவிரமான காட்சித்துல்லியம் அமைந்திருக்கிறதோ, அதே தெளிவு மற்றதிலும் இருக்கும். போகிறபோக்கில் இதுவும் நடந்தது, இந்தக் குரூரமும், அசிங்கமும், வன்மமும், வீழ்ச்சியும் கூட வாழ்க்கை தான் என்று சொல்லிவிட்டு நகர்வார். வாசகருக்குத் தான் உறக்கம் கெட்டு விடும். உடல் குறைகளுடன் கையேந்தும் மனிதர்களை எங்கு கண்டாலும் கோபமும் குற்றவுணர்ச்சியும் மேலிடும். ஒரு வேளை  மனதளவில் மேட்டிமைத்தனத்துடன் வாழ்கிறோமோ என்ற அச்சம் வேறு. சிறப்பு தரிசனத்திற்குச் சீட்டு எடுத்திருந்தாலும், நீண்ட, வார இறுதி நாட்களில் திருச்செந்துருக்கு வந்தால், பொது தரிசனத்தின் தள்ளு முள்ளுகளும், காத்திருத்தலும், ஜருகண்டியும் உண்டு என்ற உண்மை அவ்வச்சத்தைத் தகர்த்தது. இச்சகத்தில் நெருக்கடி இல்லாத நொடி என்றொன்றில்லை. இத்தனைக்கு நடுவிலும் கந்த சஷ்டிக்கவசமும், ‘முருகா முருகா என்றால் உருகாதோ உன்னுள்ள’மும் (ஸாவேரி ) இனிதே நடந்தேறியது.

செந்தூரின் கடற்கரையில் நின்றாடிய பின்பு நாங்கள் செல்ல நினைத்த இடம் நாகர்கோயில், வழியில் ஆழ்வார் திருநகரயில் திருப்புளி ஆழ்வாரைப் பார்த்துக்கொண்டோம். அழகான நாயக்கர் கால ஆலயம். மேலுத்தரத்தில் ராமாயணத்தின் பால காண்டமும்  அயோத்யா காண்டமும் கற்சித்திரங்களாக செதுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, புத்ரகாமேஷ்டி யாகத்தின் பலனாக வயிறு புடைத்திருக்கும் தசரத மனைவியரின் தோற்றம் மிகவும் நுட்பமாக அமைந்திருந்தது. கூடுதல் தகவல்: இப்பொழுதெல்லாம் பெருமாள் கோவில்களில் சேல்ஸ் ரெப்  போல பேச்சு கொடுத்து, விளக்கமளித்து,  ‘காணிக்கை குடுங்கோ’ என்று கேட்டே வசூல் செய்துவிடுகிறார்கள்.  அதர்மசங்கடம்!

நாகர்கோயில் அவ்வளவு ஒன்றும் நன்றாக இராது என்றும், தெற்கு  பயணத்துக்கு கிளம்பினாலே கன்னியாகுமரியில் சூரியோதயத்தைப்  பாராமல் அகம் திரும்பியோர் இல்லை என்று எங்களை நம்பவைத்து கழுத்தறுத்தவர்  எங்களுடைய சாரதி. வட்டக்கோட்டை-சிதறால் மலை-திருவட்டாறு-திற்பரப்பு-சிவாலய ஓட்டப் பாதை என்று ஒரு நீண்ட பட்டியலைச் சுமந்து வந்த நாங்கள், சூரியோதயத்தையும் , பத்மநாபபுர அரண்மனையும் மட்டுமே பார்த்து, இரவில் ஆறு மணி நேரம் மட்டுமே தங்குவதற்கு ஆயிரத்தெண்ணூறு ரூபாய்களை அழுதுவிட்டு வந்ததிற்கு காரணங்கள் இரண்டு – ஒன்று, நாங்கள், சீ! ச்சே! பாவம் மூட மாதர்கள் – எங்களுக்கு அறிவு இருக்க வாய்ப்பில்லை, ஒப்பனை  செய்துகொள்ளவும், தூங்கவும், ஜனத்தொகை பெருக்கவும் மட்டுமே தெரிந்த பொம்மைக் குழந்தைகள். இரண்டு – எங்களுக்கு 20, அவருக்கு 50. வயதைத்தான் சொன்னேன். தலைமுறை இடைவெளி, மற்றும் வண்டி ஓட்டுவதைத் தொழிலாகக் கொண்டவர்களின் இயல்பான மந்தமான, மரத்துபோகும் தன்மை எல்லாம் சேர்ந்து குமரியில் விடிந்தது. எங்கும் கூட்டம். எதிலும் கூட்டம். சூரியோதயப் புள்ளியில் நின்று வள்ளுவனைப் பார்க்க பிரம்மிப்பாக   இருந்தது. ‘கற்றதனால் ஆய பயனென் கொல்?’ என்ற வரி ஒரு மந்திரம் போல் மனதிற்குள் ஓடிக்கொண்டிருந்தது. பொன்னொளியில் சுழிப்பும் சிரிப்புமாக கடலைப் பார்க்க பார்க்க, ,மனதில் ஒருவிதமான தவிப்பு குடிகொண்டு விட்டது. நுங்கும் நுரையுமாக சுழித்தோடிய நீரில், என் கால்களை நானே  திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டும், படமெடுத்துக்கொண்டும் இருந்தேன். மஞ்சள் முகத்தில் மூக்குத்தி மின்ன, மனதில் ஆயிரம் கனவுகளைச் சுமந்தபடி, நீள்விழியில் குழந்தைக்கேயான கொஞ்சல் கலந்த ஏக்கம் ததும்ப,  கால் கடுக்க அவள் நிற்கிறாள். தவிப்பு, இங்கு இயல்பு தானே? நீண்ட வரிசையில், வியர்வை வழிய ‘சிவகாம சுந்தரி, ஜகதம்பா வந்தருள், தந்தருள்’ (முகாரி) என்று முணுமுணுத்துக்கொண்டே ஊர்ந்து சென்று அவளைப்  பார்த்தபொழுது கண்கள் பனித்து விட்டது. கூடவே, ஜெமோவின் ‘கன்னியாகுமரி; நாவலும் நினைவிற்கு வந்தது. தன் கண் முன்னால் காதலி வன்புணர்ச்சிக்கு உள்ளாவதை பார்த்து ஒரு வெறுக்கத்தக்க மனிதனாக மாறும் கதாநாயகன், தனக்கு நேர்ந்த கொடூரத்தை விபத்தாக பாவித்து ஆழ்ந்து பரந்த அறிவிற்கும் மனதிற்கும் சொந்தமாகும் ஒரு நாயகி, கலை மனம் கொண்டவனாக இருந்தாலும் சுய எமற்றுகாரனாக விளங்கும் நாயகனை லாகவமாக நழுவிச் செல்லும் நாயகி, இவர்களின் உளவியல் சிக்கல்களை அமைதியாகவும், ஆர்பரிப்புடனும், சிறு புன்னகையோடும், நெரித்த புருவங்களோடும் இயல்பாகவும், நாடகத்தன்மையுடனும் நிழல் போல் தொடரும் கடல் அழகி என்று திரைமொழியின் காட்சிக்  கோர்வையுடனும், தற்கால இலக்கியத்தின் நடை வேகத்துடனும் நாவல் நம்மை இழுத்துச் செல்லும். இந்தியாவில் மொத்தமே மொத்தம் ஐந்து சுவாரஸ்யமான பெண்கள் என்பன போன்ற துணுக்குகளெல்லாம் கரைதனில் அசட்டையுடன் எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் போல எரிச்சலூட்டினாலும், ஜெமோ என்னும் சமுத்திரத்தின் கலைக்கு முன்னால் ஒன்றுமில்லாமல் போகிறது. பிளாஸ்டிக் குப்பை சேர்ந்தால் கடல் தன் அழகை இழந்துவிடுவதோடன்றி, துய்மயையும் இழந்துவிடுகிறது அல்லவா? கடலைப் பற்றித் தெரியவில்லை, ஆனால் பிளாஸ்டிக் அவ்வளவு எளிதாக மட்குவதில்லை. கடலுக்கு யார் கச்சை கட்டுவது? சிங்கத்துக்கு வேர் கால்வாய் சிகிழ்ச்சை செய்த கதை தான்!

பகவதி அம்மனைப் பார்த்து, பேரம் பேசி, சங்கு வளையல்கள் வாங்கி, அவசரம் அவசரமாக சுசீந்திரம் சென்றோம். வெளிப்பிரஹாரத்தில் உள்ள சிற்பங்களைப் பார்க்கவே அறை நாள் வேண்டும் போலிருந்தது. வால் -ஆசனத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் அனுமன், கோவர்தனகிரிதாரியாக கண்ணன், பெண் யானையுடன் (யாரது?) போர் புரியும் கணேசன் என்று பற்பல நுண்ணிய கல் சித்திரங்கள் காணக் கிடைத்தன. மீண்டும் அதே நீண்ட காத்திருப்பு, இம்முறை தாணுமாலையனுக்காக. லிங்கத்தின் மேல் வெள்ளிக்கவசத்தில்  முகமும், தலையில் பொன்னாலான நீண்ட நெளிமோதிரம்  போன்ற ஆதிசேஷனும் ஜொலிக்க மும்மூர்த்திகளை ஒருருவமாகக் கண்டேன். இவனுக்காக அவள் காத்திருக்கலாம் தான் என்று தோன்றியது. அந்த லேடிக்கேத்த சோடி என்று சொன்னால் சிரிக்கக் கூடாது. 

உற்சாகம் ததும்ப நாகர்கோயிலை நோக்கிப் புறப்பட்டோம். பார்த்தால் எல்லாம் தெரிந்த இடமாக இருக்கிறது. தாமரைப்பூத்தத் தடாகங்களும், வெப்பமோ, வெட்கமோ என்றுத்  தோன்றும்படியாகத்  தலை சாய்த்துச் சிரிக்கும் தென்னை மரங்களும், மேகம்சூழ் மலைகளும்..இங்கு இருந்தால் யாரால் தான் படைக்க முடியாது? கொள்ளை அழகு. ஜெமோவின் சொல் கொடுத்த விழிகளின் வழியாகவே நாகர்கோவில் மலர்ந்தது. பார்வதிபுரம் கடந்த பொழுது கன்னத்தில் போட்டுக் கொள்ளாதக் குறை தான். (நல்ல வேளை ஜெமோ ஊரில் இல்லை!) 31 A – பார்வதிபுரம் போகும் டவுன் பஸ், தெரியுமோ? ஜெமோ இதில் பயணித்திருக்கக் கூடும். இந்தியன் வங்கி ATM  ஒன்று இருக்கிறது. அநேகமாக ஜெமோ அங்கிருந்து  தான் பணம் எடுக்கக் கூடும். இயந்திரத்தை உடைத்து நஷ்ட ஈடு கொடுத்திருக்கக் கூடும். வழியில் BSNL அலுவலகத்தைப் பார்த்து, அன்னாரின் பூர்வாசிரம லீலா விநோதங்களைப் பற்றி விதந்தோதிக்கொண்டே  வந்தோம். ஏதோ ஒரு மருத்துவமனையைப் பார்த்து இங்கு தான் ஜெமோ மாஸ்டர் செக்-அப் செய்ய வருவார் என்று எஸ் அடித்துக் கூறினார். புகழ் பாடி மாளவில்லை.

பத்மாபபுரம் அரண்மனையில் கால் மாரத்தொன் தூரத்தை அடி அடியாக வைத்துக்  கடந்தால் எப்படி முடியும்?அதுவும் சாப்பிடாமல். திருநெல்வேலி திரும்பும் வழியிலாவது, அன்றைய நாள் அரண்மனையைச் சுற்றி வருவதில் விரையமனாதைப் பற்றிப் பேசினால் தவிர்க்க முடியுமா என்று பார்த்தால் , ஜெமோ எப்படி தன் நாளின் ஒரு நாழிகையைக்கூட வீணடிக்காமல் எழுதுவார் என்று ஆரம்பித்து, ‘பித்தனின் பத்து நாளி’ல் எப்படி ஒரு மோசமான செல்பி எடுத்து போட்ருந்தார் பாத்தியா’ என்று எஸ்  சொல்ல, ‘அமாம், தாடியும் மீசையுமாக’ என்று நான் சொல்ல, ‘எங்க வீட்ல எல்லாம் ஒரு நாள் அப்பா ஷேவ் பண்ணலனா  கூட அம்மா திட்டுவாங்க, எப்படி அவரு வீட்ல இத கேக்காம விடறாங்க?’ என்று அறச்சீற்றத்துடன் எஸ் வினவ, ‘அவரு சவரம் செய்யலானா, அங்க காவியமுல்லா  பிறக்குது’ என்று நான் அளித்த விளக்கத்தை அவர் ஒப்புக்கொள்ளும்மாறு ஆகிவிட்டது.

ஜெமோவை பற்றி அடுத்த முப்பது நிமிடங்களுக்கு பேசக்கூடாது என்று அத்தருணத்தில் நாங்கள் சூளுரைத்தோம். நெல்லை செல்கிற வழியில், மேற்கு தொடர்ச்சி மலைகளின் பின்னணியில், வானுயர்ந்த காற்றலைகளினூடே சூரியாஸ்தமனத்தைப் பார்த்து, வண்டியை நிறுத்தி, இறங்கி புகைப்படமெடுத்தோம். மலையைப் பார்த்ததால், வேணுவும், நீலியும் உரையாடலில் நுழைந்து விட்டார்கள். நீலி வந்தால் நீலமும் கூட வரும். இருவரும் விதியை மீறி விட்டோம். நெல்லைக்குள் நுழைந்தால் ‘ஜெயமோகர் துணை” என்று கொட்டை எழுத்துக்களில், நீல வண்ணத்தில் ஒளிர்ந்தது . நாங்கள் இருவரும் கலக்கம் கொண்டோம். சற்று நெருங்கி பார்த்தால், ‘ஜெயமோ கர்த்தர் துணை.’ அசட்டுச் சிரிப்புடன் தொடர்ந்தோம். 

செல்வேந்திரன் அவர்களை மறுநாள் காலையில் சந்திப்பதாக ஏற்பாடாயிற்று. நாங்கள் கிருஷ்ணாபுரம் செல்ல வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.  கவிஞர் க்ருஷியும் இந்தத்  திடீர் சந்திப்பில் சேர,  எண்ணை  தோசை சாப்பிட்டுக்கொண்டே ஓர் இனிய சந்திப்பாக அது அமைந்தது. கிருஷ்ணாபுரக் கோவில் முகப்பை பார்த்த பொழுது இதற்குத்தான இவ்வளவு பீடிகையா  என்றாகிவிட்டது. இயல்பாகவே அழகாக இருக்கும் பெண்ணுக்கு ஒப்பனைச் செய்து கோரப்படுத்தியக் கதையாக, கோபுரங்களில் வர்ணம் பூசப்பட்டிருந்தது.  உள்ளே சென்று குறவன் ராஜகுமாரியை தூக்கிச் செல்லும் சிலையைப் பாரத்ததுமே, என் நினைவில், ‘மன்மதன்’ தோன்றிவிட்டான். குறத்தியின் சிலையழகை விஞ்சும் மல்லியை  மனம் தேடியது. ராஜுவின் வருணனைகளுக்கொப்ப சிலைகள் அமைந்திருக்கின்றனவா என்று சரி பார்த்துக்கொண்டேன். (சிலைகளை இரசிப்பது எப்படி என்று கலைநயம் பாராட்டல் வகுப்புகள் வேண்டும் என்று தோன்றுகிறது) வருணனை சிலையை மிஞ்சும் இடத்தில் என் கண்களே இல்லாதவற்றை இட்டு நிரப்பி முழுமையாக்கிக் கொண்டது. ஆலய நிர்வாகிகளிடமிருந்து வசவு வாங்கிக்கொண்டே படம் எடுத்தேன். வெளிப்பிரஹரங்களில் படமெடுப்பதை தடை செய்வதன் நோக்கம் இன்றுவரை எனக்கு விளங்கியதில்லை.

மன்மதனின் கோடாலி மீசையும், கோமாளியின் இளிப்பும், அகோர வீரபத்திரரின் நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த கல்லாலான தலைப்பாகையும் கண்களை விட்டு அகலவே இல்லை.ரதியும், மன்மதனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்  கொண்டாலும், சேரவே முடியாதே என்று எஸ் குறைபட்டுக்கொண்டார்.  தொன்மத்தின்படி, மன்மதன் அரூபன், இருந்தாலும் அவனே காமதேவன், புலன்கள் இல்லாவிடினும், புலனழகைப் பார்ப்பவன். கதைத்தபடியே, கால்கள் வெப்பத்தில் பொரிய காருக்குள் நுழைந்து புறப்பட்டோம். மிஷ்கினுக்கு போட்டியாக கறுப்புக் கண்ணாடி அணிந்த கதாசிரியர் செல்வேந்திரனுடன் சேரன்மாதேவி வழியாக திருப்புடைமருதூர் புறப்பட்டோம். வழியில் இலக்கிய விவாதம் தான் என்று சொல்ல வேண்டியதில்லை. இணைய பிச்சைக்கரர்களைப்போலவே  இணைய கொச்சைக்காரர்கள் நிறைய உண்டு என்று அறிந்து கொண்டோம். திருப்புடைமருதூர் பறவைகளின் சரணாலயம் என்று அறிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் கண்கூசும் நிறத்தில் உடை அணிந்திருக்க மாட்டேன். மூடியிருந்த கோவிலைச் சுற்றி வந்தோம். கண்டதையெல்லாம் படம் எடுத்து டிரைவர் உட்பட எல்லோரையும் பொறுமை இழக்கச்செய்தேன். பாம்பு படமெடுக்கிறது என்றெல்லாம் சொல்லி அச்சுறுத்திப் பார்த்தார் கதாசிரியர், நானும் போட்டிக்கு எடுப்பதை நிறுத்தவில்லை. ஒருவாறு பேசி முடித்து துங்கா  நகரத்தை  நோக்கி புறப்பட்டோம். சென்னையிலிருந்து கிளம்பிய நாள் முதல் தொடர்ந்து ஐந்து மணி நேரம் கூட தூங்கவில்லை என்று உடல் உணர்த்தியது. இலேசாகக் கண் அயர்ந்தேன், சட சட வென்று மழைத் தொற்றிக்கொண்டது. தென்னை மரங்கள் இப்பொழுது சிரித்துக்கொண்டே உற்சாகமாக தலை அசைப்பதைப் போல் இருந்தது. இரயிலடியில் அவசரமாக மல்லிப்பூச்சரம் வாங்கிக்கொண்டு ஓடினேன். மனம் முழுக்க ரஹ்மானின் பொய்க்குரலில் ‘தீரா உலா’ பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. விடிந்ததும் சென்னையின் சுள்ளென்று படரும் வெய்யில் என்னை வரவேற்றது. ‘வீடு!’ என்று மனம் சொல்லிக்கொண்டது. கோயம்பேடு நிறுத்தத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் தேர்வு கண்காணிப்பாளரைப்  போல எல்லோரையும் சந்தேகமாகப் பார்த்து, விசாரித்துகொண்டே வந்தார். என்னைப் பார்த்தார், ஆனால் பரிசோதிக்கவில்லை. என்னிடமும் பயணச்சீட்டு இருந்தது. வாழ்க்கைப் பயணத்திற்கு சீட்டொன்றும் தேவை இல்லை என்று அவர் நினைத்திருக்கலாம்.அடுத்து எப்பொழுது நாகர்கோயில் போகலாம் என்று யோசித்துக்கொண்டே அம்மாவைப் பார்த்துச்  சிரித்தேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s